Saturday 30 July 2011

என்ன தவம் செய்ய வேண்டும்?

மனம் விரும்பாத போது
காதல் கணவனின்
மோக அணைப்பிலேயே
உள்ளம் வெதும்பிடும்
எனக்கு....
பல பேரால் பலாத்காரமாக
ஆட்கொள்ளப்படும்
அந்த பிஞ்சு மலர்களின்
தேகம் தவித்த தவிப்பையும்
மனம் உணர்ந்த வேதனையையும்
நினைக்கக்கூட திராணியில்லை!
மானிடராய் பிறப்பதற்கு
மாதவம் செய்ய வேண்டும்
என்றார்கள்....
ஆனால் இலங்கையில் தமிழ்
மாதராய் பிறக்காமல் இருக்க
என்ன தவம் செய்ய வேண்டும்
என்று சொல்லவில்லையே!?

காவல் துறையில் ஆட்குறைப்பு!?

இராண்டாம் உலகப் போரின் பின் UKல் நடக்கும் மிகப் பெரிய அரசாங்க செலவினக் குறைப்பின் காரணமாக காவல் துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.இந்த ஆண்டு காவல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 6%ம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 20%ம் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதிக்குறைப்பால் காவல் துறையினரின் எண்ணிக்கை குறைவடையும். எற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்குள் UKல் தான் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்குமான விகிதம் மிகக் குறைவு. அதே போல் ஐரோப்பிய சராசரி குற்ற எண்ணிக்கையை விட அதிகமான குற்ற எண்ணிக்கையைக் கொண்ட நாடாகவும் உள்ளது. இந்த சூழ்நிலையில் காவல் துறையில் ஆட்குறைப்பு செய்வதால் அனேகமான குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளதாக CIVITAS ஆராய்ச்சி நிறுவனம் (national think tank) எச்சரித்துள்ளது.

குற்றங்கள் நடக்கும் இடங்களில் காவல் துறையினரின் வருகை தாமதமாவதாலும் குறைவதாலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. இது ஏனையோருக்கும் குற்றம் செய்ய தூண்டுகோளாக அமையும். இதனால் அண்மைக் காலங்களில் குறைந்து கொண்டிருக்கும் குற்ற எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆனால் காவல் துறைக்கான அமைச்சர் Nick Herbert இந்தக் கூற்றுகளை மறுக்கிறார். "New York நகரத்தில் காவல் துறையினரின் எண்ணிக்கை குறைவடைந்த போதும் அதை விட வேகமாக குற்ற எண்ணிக்கைகள் குறைந்துள்ளது. அதனால் ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு திறம்படச் செலவிடப் படுகிறது என்பதிலும், இருக்கும் அதிகாரிகளின் செயல் திறனிலுமே காவல் துறையின் வெற்றி உள்ளது. அவர்களின் எண்ணிக்கையில் இல்லை" என்று கூறுகிறார்.

எது எப்படியோ, கடைசியில் அல்லல் படப் போவது மக்கள் தான்...!

Saturday 23 July 2011

தெய்வத்திருமகள் - ஒரு கண்ணோட்டம்

அண்மையில் வெளிவந்துள்ள தெய்வத்திருமகள் திரைப்படம் என் நினைவுகளை வருடிக்கொண்டே இருக்கிறது. நடிகர் விக்ரம், இசையமைப்பாளர் G.V.பிரகாஷ், இயக்குனர் T.L.விஜய் மூன்று பேருக்குமே தங்கள் கலைப்பயணத்தில் குறிப்பிடக்கூடிய மைல் கல்லாக அமைந்திருக்கும் படைப்பு. 

மனதளவில் குழந்தைகளாக இருப்பவர்கள் ஒளிவு மறைவில்லாமல், தூய்மையான மனதுடன், ஒற்றுமையாக, பொறாமை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும் போது, நானும் அப்படியே இருந்திருக்கலாமே என்று எண்ணத் தூண்டுகிறது. 
அதற்கு மாறாக இனிப்புத் திருடுவது அம்பலமாகக் கூடாது என்பதற்காக இருவரின் உறவை தவறாக சித்தரிப்பது, சமுதாயத்தில் மதிப்பான இடத்தில் இருப்பவர் தாம் நினைப்பது நடக்க வேண்டும் என்பதற்காக குழந்தை மனம் படைத்தவனை ஏமாற்றி நடுச்சாலையில் இறக்கிவிடுவது, எப்படியும் வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்று பிழையான வழிகளைக் கையாள்வது போன்ற காட்சிகளை அமைத்து குழந்தைத்தனம் இல்லாதவர்களின் மன நிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அழகை இயக்குனர் சித்தரித்து விட்டார்.
 
அனுவிற்கும் அவள் தந்தைக்கும் இடையில் நடக்கும் கதை என்னவென்று கடைசி வரை தெரியாமல் என் தலை வெடித்துவிட்டது.

வெளி நாட்டு மாப்பிள்ளையாக  கதையில் ஒரு பாத்திரம் வந்துவிட்டால் எல்லோருக்கும் ஏன் கார்த்திக் குமாரின் ஞாபகம் வருகிறது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி நடத்தலாமென்றிருக்கிறேன்.

G.V. பிரகாஷ்குமாரின் இசையில் அவர் காதல் நாயகி சைந்தவி, "பாடியிருக்கும்" என்று சொல்லக்கூடாது, "உருகியிருக்கும்" விழிகளில் ஒரு வானவில் என்ற பாடல் மெய்மறக்கச் செய்கிறது.

ஆறு வயது மனம் படைத்தவன் தன் மகளின் சந்தோஷம், நல்வாழ்க்கை என்பவற்றிற்கு தன்னுடைய சுய நலத்தால் கெடுதல் வந்துவிடக்கூடாது என்று நினைத்து தன் சந்தோஷத்தை விட்டுக்கொடுத்து அவனுடைய தந்தையன்பை (தாயன்பின் எதிர்ப்பால்) வெளிக்காட்டுவது மனிதாபிமானத்தின் உச்சம். பிள்ளைகளின் சிறு சிறு விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் கோடான கோடித் தந்தைகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.

எல்லாம் சரி. ஆங்கிலப்படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும். Short and sweetஆக நச்சென்று கதை சொல்வார்கள். தமிழ்ப்படம் என்றால் இரண்டரை மணி நேரம் இருக்க வேண்டும் என்று சட்டமா? ஏன் இப்படி ஒரு நல்ல கதையை ஜவ்வு மிட்டாயாய் இழுத்தார்களோ தெரியவில்லை!

"தெய்வத்திருமகள் - பாசமானவள்"

Thursday 14 July 2011

Dr. சிதம்பரனாதன் சபேசன்

இன்று உங்களுக்கு Dr. சிதம்பரனாதன் சபேசன் என்பவரை அறிமுகப் படுத்தப் போகிறேன். "யாரிந்த சபேசன், ஏன் நாங்கள் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?" என்று நீங்கள் நினைக்கலாம்.
தமிழராய் பிறக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சகோதரர்கள் பெறும் வெற்றியையும், பெருமைகளையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானதாக எண்ணி உவகை அடைய வேண்டும். அது தான் தமிழ் தாயிற்கு நாம் நடத்தும் வேள்வி. அப்படி ஒரு வெற்றித் தமிழன் தான் இந்த "சிதம்பரனாதன் சபேசன்".

சபேசன், யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரியில் 1984ம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆரம்ப கல்வி சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். கா.பொ.த உயர் தரத்தில் 3 A's எடுத்தார். மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே UKல் உள்ள Sheffield பல்கலைக்கழகம் அவருக்கு BEng (Hons) Electronic Engineering படிப்பதற்கான scholarship வழங்கியது. அவர் பட்டம் பெற்ற அந்த ஆண்டில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவது மாணவராக தேர்ச்சி பெற்றார். விஞ்ஞான தொழில் நுட்ப மாணவர்களுக்குள் நாட்டிலேயே முதல் 18 பேரினுள் ஒருவராக இருந்தமையால் Sir William Siemens Medal என்ற உயரிய விருதினையும் பெற்றார். அதன் பின் cambridge பல்கலைக்கழகத்தின் Corpus Christi கல்லூரியில் Masters Degree (MPhil) முடித்த பின் அங்கேயே PhD பட்டத்தையும் 2008ம் ஆண்டு பெற்றார். கல்வியில் மாத்திரம் இல்லை இவர் சிறந்த விளையாட்டு வீரரும் கூட.

ஒரு தமிழன், அதுவும் போர்ச் சூழலில், யாழ்ப்பாணத்தில் படித்து வந்த மாணவன், இவ்வளவு சாதித்ததே போற்றப் பட வேண்டியது. ஆனால் சபேசன் அதையும் தாண்டி விட்டார்.

Real Time Locating Systems (RTLS) என்ற ஒரு தொழில் நுட்பம் உள்ளது. சிறிய tag-களை பொருட்களில் பொறுத்தி, அவற்றிலிருந்து வெளிப்படும் signal மூலம், அந்த பொருட்கள் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Dr. சபேசன், தனது நண்பர் Dr. Michael Crisp உடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் மிகவும் மலிவான விலையில் இப்படியான location sensing system உருவாக்கும் வழிவகையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக Royal Academy of Engineering Foundationன் Entrepreneurship Award பெற்றுள்ளார்.

பெரிய கடைக்காரர்களுக்கும், விமான சேவை நிறுவனங்களுக்கும் மிகவும் தேவையான தொழில் நுட்பம். விலை உயர்ந்த பொருட்கள், பயணிகளின் பொதிகள் ஒரு மீட்டருக்கும் குறைவான தூர வித்தியாசத்திற்குள் கணணித் திரையில் சுட்டிக் காட்டிவிடும். இப்போது இருக்கும் tagகள் அதிகமான செயல் திறனை கொண்டுள்ளதாக இல்லை. விலையும் அதிகம்.

சபேசனின் கண்டுபிடிப்பை பாவிப்பதன் மூலம் விமான சேவை நிறுவனங்கள் £400mக்கும் மேல் சேமிக்க முடியும். பெரிய கடைத் தொகுதிகளுக்கு பொருட்களை களவாடப்படாமல் தடுப்பதற்கு மாத்திரம் இல்லாமல், self checkoutகளிலும் இந்த தொழில் நுட்பம் உதவியாக இருக்கும்.

ஆராய்ச்சி செய்து proto-type உருவாக்கிவிட்டார் சபேசன், இனி இவர் பொருளாதார ரீதீயாகவும் இந்த தொழில் நுட்பத்தைப் பரப்பி வெற்றி வாகை சூட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை தமிழர் எல்லோரும் சேர்ந்து வேண்டுவோம்.

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

Tuesday 12 July 2011

அந்தி மழை பொழிகிறது....

"அந்தி மழை பொழிகிறது.... ஒவ்வொரு துளியிலும்...
உன் முகம் தெரிகிறது...."

வைரமுத்துவின் காவிய வரிகள். கண் தெரியாத காதலன், தன் காதலியை வர்ணித்துப்  பாடும் பாடல்.
நான்கு பேர் கூடும் இடங்களில் தானும் ஓர் இலக்கியவாதி என்று பறை சாற்றும் பலர் வைரமுத்துவின் கவித்திறனை ஆராய முற்படும் போது கையில் எடுக்கும் பாடல் இது. "நாயகன் கண் தெரியாதவன் - ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது - என்று பாடுவதாக எழுதினால் கேட்பவர்கள் எல்லாம் முட்டாள்களா?" என்று அந்த முட்டாள்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு மழைத் துளி விழும் போது, அந்த உருண்ட, குளிர்ந்த நீர்த்துளி உடலில் விழுந்து சிலிர்ப்பைத் தரும். துளித் துளியாய் விழும் ஓசை காதுகளுக்கு இசையாகும். மண்ணில் தெறித்து எழும் வாசம் ஏகாந்தமாய் நாசியை வருடும். மழையை ரசித்து அதில் நனைபவருக்குத் தெரியும், மழைத் துளியைப் பார்க்க பார்வை தேவையில்லை என்பது.

காதல் மங்கையின் சினுங்களில் லயித்து, தொடுகையில் சிலிர்த்து, அவள் மென்மையில் கரைந்து, வாசணையை நுகர்ந்து ரசிக்கும் எந்த ஒரு ஆணுக்கும் தெரியும் - ஒவ்வொரு (மழைத்) துளியிலும் உன் முகம் தெரிகிறது - என்ற வரியின் தாக்கம். 

விழியில் பார்வை இழக்கும் போது மற்ற புலன்கள், இன்னும் மேம்பட உணர்வுகளை அறியும். அப்படியான சரியான சூழ்நிலையில் இந்த உருவகத்தைப் பாவித்திருக்கும் கவிப் பேரரசு கம்பனுக்கு எந்த விதத்திலும் சலைத்தவரில்லை.

தமிழனின் மந்திரம் !!

தமிழன் என்று சொல்லடா....
தலை நிமிர்ந்து நில்லடா!


தமிழனாக பிறக்கும் ஒவ்வொருவருடையவரின் நாவிலும் தாரக மந்திரமாக உச்சரிக்கப் பட வேண்டிய சொற்கள்!!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget