Tuesday, 23 August 2011

கேபிள் சங்கருடன் ஒரு சந்திப்பு


சென்னை வரும் போதே, இம்முறை என் லிஸ்ட்டில் சங்கர் ஸாரின் சந்திப்பை போட்டு வைத்திருந்தேன். அலைபேசியில் அழைத்து விலாசம் வாங்கி, “சென்னையில் எனக்கு தெரியாத இடமேயில்லை” என்று மார் தட்டிய என் தம்பியை வாகன ஓட்டியாக்கிக் கொண்டு கிளம்பினேன். வண்டியில் ஏறி கொஞ்ச தூரம் போன பின்பே ”எங்கே போகிறோம்” என்றான். சைதாபேட்டை என்றவுடன் “அது எங்கே இருக்கு?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான் அவன்.   பிறகென்ன அங்கங்கே நிப்பாட்டி வழி கேட்டு ஒரு மாதிரி கேபில் ஸார் வீட்டைச் சென்றடைந்தோம். ஆனா என்ன பெரிய கொடுமை ஸார் என்றால், ஒரு டீக்கடையில் நிறுத்தி கேட்ட போது அங்கிருந்தவர் “மேற்கு சைதாபேட்டா, வெஸ்ட் சைதாபேட்டா” என்று கேட்டார்.

கஷ்டப்பட்டதற்கு பலனாக சங்கர் ஸார் வீட்டில் அவருடனான சந்திப்பு மிக இனிமையாக அமைந்தது. அறிமுகங்களின் பின் காபி பலகாரத்துடன் எங்கள் பேச்சு தொடர்ந்தது.

சினிமா துறையில் அவர் அனுபவங்களையும், அவர் எழுதிய புத்தகங்களையும் பற்றி மனம் திறந்து பேசினார். எந்த வித ஒழிவு மறைவில்லாமல் blog பற்றின நுனுக்கங்களை சொல்லிக்கொடுத்தார். என் கம்பனிக்கு ஒரு jingle ஒளிப்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்தார். நாட்டு நடப்புகளையும் அலசினோம். அவர் எழுதி வெளிவந்த பிரியானி என்ற கதை உருவான சம்பவத்தை வெகு சுவாரசியமாக சொன்னார். "நான் ஷர்மி வைரம்" கதையின் போக்கைப் பற்றியும் நிறையப் பேசினோம்.

குறிப்பாக அவர் சமூகத்தில் கொண்டிருக்கும் அக்கறையைக் கண்டு பெருமைப் படுகிறேன். தன் நாட்டு குடிமகன் ஒவ்வொருவரும் தன் அடிப்படை உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்தாலே நாடு முன்னேறிவிடும் என்று அவர் சொன்ன கருத்து என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. அவை எவ்வளவு சரியான, சக்தி வாய்ந்த வார்த்தைகள். மொத்தத்தில் அவர் பேச்சிலிருந்தும் பழகியவிதத்திலும் ஒரு நல்ல பண்பான சகோதரரின் நட்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 

Monday, 22 August 2011

சொர்க்கமே என்றாலும்....

ஏர்போர்ட்டிலேயே....
வந்து மேலே விழும் போர்ட்டர்கள்!
பறக்கும் பாலம் என
குறுக்கே நிக்கும் பில்லர்கள்!
காப்பரேசன்காரன் திறந்து வைத்த
பல மேன் ஹோல்கள்!
பிழையாக வந்து முறைத்துச்
செல்லும் ஆட்டோக்கள்!
இப்படி எத்தனை குறை
என்றாலும் - மனம்
வாழ்ந்த லண்டனை விட
வளர்ந்த சென்னையையே தேடுது!
அடித்துப் புறம் தள்ளினாலும்
மீண்டும் வலியைச் சொல்ல
அதே தாயிடம் செல்லும்
சேய் போல......

Sunday, 21 August 2011

அப்பாவின் அன்பு


British Airways விமானத்தில் சென்னையை நோக்கிய என் பயணம் ஆரம்பிக்கின்றது.   கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து என் அப்பாவைப் பார்க்கப் போகிறேன் என்ற பூரிப்பு என்னுள்ளே. அப்போது எனக்கு முன் இருக்கையில் ஓர் இளம் குடும்பம். தாய், தந்தை, ஒரு வயதினையும் எட்டாத ஒரு பெண் குழந்தை. தன் மகளின் ஒவ்வொரு அசைவிலும், சிணுங்களிலும் அந்தத் தந்தை அடைந்த ம்கிழ்ச்சியையும், அவர் கண்களில் தெரிந்த ஒளியையும் பார்த்த போது, அந்த தந்தை தன் செல்வத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.  இப்படித்தானே என் தந்தையும் என்னை சீராட்டியிருப்பார் என்ற நினைப்பு என் நெஞ்சில் பரவியது. ஒரு தாய் தன் மகளைப் பார்க்கும் போது, ஒரு பெண்ணாக இருந்து பார்த்து பெண்ணிற்கு புகுந்த வீடு செல்லும் முன் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அவள் அழகும், நடத்தையும் மற்றவர்களின் கண்ணை உறுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறாள். அதனால் மகளுடன் கண்டிப்பும், கறாருமாகவே இருக்கிறாள்.
ஆணாக இருக்கும் தந்தைக்கு அந்தக் கவலை ஏதும் இல்லை. தன் அங்கமாக புவியில் ஆட வந்த தேவதையாகவே மகளை எண்ணுகிறார். அதனால் தான் செல்ல மகள் தத்து பித்தென்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் கலை நயத்தை பார்த்துப் பெருமை அடைகிறார்.  நானும் என் தந்தையும் மட்டும் இல்லை, என் கணவருக்கும் மகளுக்கும் இடையிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. தந்தையின் அதீத பாசத்துடனும், செல்லத்துடனுமே அவள் வளர்கிறாள்.
காவியங்கள் எல்லாம் தாய் அன்பைப் போற்றும் அளவிற்கு தந்தை அன்பை ஏன் போற்றுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு.
கடினமான பாறைக்கு இடையில் பூக்கும் அந்தப் பூவின் மென்மை தான் இந்த தந்தையன்பு. பல தரப்பட்ட மனிதர்களை நான் அவதானிக்கும் போது, இந்த உணர்வைக் கவனிக்கத் தவறுவதில்லை. ஆனால், ஒவ்வொறு முறையும் அது என்னுள் ஒரு சிலிர்ப்பை விட்டுச் செல்ல தவறுவதுமில்லை.
Teenage காலத்தில் எனக்கு வில்லி என் அம்மா, இப்போது என் மகளுக்கு நான். ஏனென்றால், தங்கள் தேவதைகள் தவறு விடும் போது ஒவ்வொரு அப்பாவும் சொல்லும் வசனம் "பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல, பேச வந்துட்டளாம்." இந்த வசனமும் எத்தனை முறை கேட்டாலும் என்னை ஆச்சிரியப்பட வைக்கத் தவறுவதில்லை.


Wednesday, 17 August 2011

லண்டன் எரிந்தது - நேரடி அனுபவம்கண்ணகி கோபப்பட்டாள், மதுரை எரிந்தது, சரி. ஆனால் யார் கோபப்பட்டு லண்டன் எரிந்தது? அங்கே தான் வேறுபாடு. கோபத்தால் இல்லை ஆசையால் அதுவும் பேராசையால் தான் லண்டன் எரிந்த்து.

மார்க் டக்கான்
ஆகஸ்ட் 4, 2011 அன்று மார்க் டக்கான் (Mark Duggan) என்ற ரெளடி ஒருவனை பிடிப்பதற்காக சென்ற காவல் துறையினர், அவனுடன்  நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் அவன் இறந்துவிட்டான். இதைக் கண்டிப்பதற்காக என்று சொல்லி, ஏதோ அப்பாவி ஒருவன் இறந்தது போல் ஊரைக் கூட்டி அழுதபடி அவன் குடும்பத்தினர் அவன் நன்பர்களுடன்  சேர்ந்து ஊர்வலம் நடத்தினார்கள்.  ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கூட்டத்தினர் மாலை மயங்கி இருளத் தொடங்கிய போது சிறிது சிறிதாக ஆயுதங்களைக் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறார்கள். திடீரென்று கூட்டத்தின் நடுவே 16 வயதுப் பெண் ஒருத்தியை காவல் துறையினர் தாக்கிவிட்டனர் என்ற புரளியை யாரோ கிளப்பிவிட்டு, அதை சாக்காக வைத்து காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினார்கள். ஒரு பிரிவு காவல் நிலையத்தை கை பார்க்க, மற்றவர்கள் குழுக்களாக பிரிந்து சென்று சு்ற்றியிருக்கும் வியாபாரத் தளங்களைத் தாக்கி சூறையாடியிருக்கிறார்கள். (இதைத் தெரிந்ததில் இருந்து நம்ம ஊரு தமிழ் அரசியல் சினிமாக்களை இவிங்க எங்கே பார்த்திருப்பார்கள் என்று தான் எனக்கு குழப்பம்.)

அன்று இரவு நல்ல வேட்டையை ருசி பார்த்தவர்களுக்கு, அடுத்த நாளும் சும்மா இருக்க முடியாமல்,  Brixton, Enfield, Islington, Wood Green, Oxford Circus ஆகிய இடங்களில் 7ம் திகதி இரவு தங்கள் வேலையைத் துவங்கிவிட்டார்கள். 8ம் திகதி பகல் சிறிது அடங்கி மீண்டும் சாயங்கால வேளையில் தொடங்கிய அவர்கள் லீலைகள் Brixton, Bromley, Camden, Chingford Mount, Clapham, Croydon, Ealing, East Ham, Hackney, Lewisham, Peckham, Stratford, Waltham Forest, Woolwich போன்ற பகுதிகளுக்கும் நீண்டது. காவல் துறையினர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு குவிக்கப்பட்டதால், 9ம் தகதி லண்டன் அமைதியாகியது. ஆனால் பிரச்சிணை இங்கிலாந்தின் வேறு பகுதிகளிலும் அன்று வெடித்தது. Birmingham, Nottingham, Leicester, West Bromwich, Wolverhampton, Bury, Liverpool, Manchester, Rochdale, Salford, Sefton, Wirral என்று நாடு தழுவிய ரீதியில் காடையர்கள் தங்கள் வேலையைக் காட்டினார்கள்.

கடைசியில் பார்த்தீர்களேயானால் செத்தவனுக்கும் நடந்தவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடைகள், வங்கிகள், பொதுச்சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஏதோ வெறி வந்தவர்கள் போல் சம்பந்தமில்லாத கட்டங்களையும், குழந்தைகள், பெண்கள் இருந்த வாகனங்களையும் கொழுத்தியிருக்கிறார்கள். பொருட்களை திருடியதைக் கூட என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் அப்பாவிகளின் சொத்துக்களை எரிக்க வேண்டும் என்பது கடைசி வரை விளங்கமுடியவில்லை. இங்கிலாந்தில் கடைகளுக்கு மேலே மாடி வீடுகளில் ஜனங்கள் குடியிருப்பார்கள். அவ்வளவு பேரும் போக்கிடம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் வீட்டை எரித்ததும், அவர்கள் தங்கள் கார் உள்ளே தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள்ளும் பாட்டில் குண்டு வீசப் பட்டிருக்கிறது. நான் இருக்கும் Croydon பகுதியிலே தான் எங்கள் வியாபாரத் தளமும் உள்ளது. அதே வீதியில் இருக்கும் பிரபல electronic items விற்கும் 5 பெரிய அங்காடிகள் களவாடப் பட்டன.  இரவு விழித்திருந்து என் உறவினர்களும் ஊழியர்களும் எங்கள் வர்த்தக நிலையத்தில் பாதுகாப்பிற்காக நின்றார்கள்.

சாலையில் மெதுவாக வாகனத்தில் ரோந்து சென்று பார்த்த போது, புற்றிலிருந்து சாரை சாரையாக கிளம்பும் எறும்புகள் போல் அவ்வளவு பேர், எவ்வித கூச்சமும் இல்லாமல் கடைகளுக்குள் சென்று பொருட்களுடன் வெளி வந்து கொண்டிருந்தார்கள். வெளியில் திரிந்த ஒன்றிரண்டு காவலர்கள் கூட எந்த தடையும் விதிக்கவில்லை. உண்மையிலேயே கையைக் கட்டிய படி தங்கள் வாகங்களை விட்டு இறங்காமல் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், என்ன கொடுமை Sir, என்றால், அந்தக் கும்பலுக்குள் காணப்பட்ட ஒற்றுமை தான். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்த படி சிரித்துப் பேசிக் கொண்டு, நிற பேதம் இன்றி, வயது பேதம் இன்றி, இன பேதம் இன்றி ஒன்றாக கொள்ளையடித்தார்கள்.

புதன் கிழமை, 10ம் திக்தியிலிருந்து தான் காவல் துறையினர் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினார்கள். அங்கங்கே இருந்த CCTV கேமராக்கள் மூலம் எடுத்த புகைப்படங்களை வைத்து ஆட்களை கைது செய்யத் துவங்கியுள்ளார்கள். இதை விட கொடுமை 2 ஜந்துகள் Facebookல் பக்கம் உருவாக்கி, இன்று எங்கே எப்படி கொள்ளையடிக்கலாம் என்று ரூம் போட்டு சிந்திக்காத குறையா மூளையைக் கசக்கி யோசித்திருக்கிறார்கள். ஆவர்களுக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப் படும் எவறுக்கும் அரசாங்கம் வழங்கும் பல தரபட்ட உதவித்தொகைகள் அவர்களின் வாழ் நாளுக்கும் வழங்கப்படக்கூடாது என்ற மனு ஒன்றில் 2 லட்சம் பேர் ( நான் உற்பட) கையொப்பமிட்டு அரசங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் பாராளு மன்ற ஒன்று கூடலில் அது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு என்ன தண்டனை இப்போது கிடைத்தாலும் கண்ணுக்கு முன் நடந்த தவறுகளை தட்டிக் கேட்க முடியாமல் தலையக் கவிழ்ந்திருக்கும் அந்த உணர்வு விட்டுச் செல்லும் வலியும், வாழ் நாள் உழைப்பெல்லாம் வீணாகிவிடுமா என்ற அந்த பதைப்பும் காலத்துக்கும் மறக்காத வடுவாக என் நெஞ்சில் என்றும் இருக்கும்.

Wednesday, 10 August 2011

உச்சிதனை முகர்ந்தால்... - லண்டனில் இசை வெளியீட்டு விழா

இலங்கையில் தமிழ் மாதராய் பிறக்காமல் இருக்க என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று தெரியாத பேதைகளில் ஒருத்தி தான் புனிதவதி. அந்தச் சிறுமியின் வாழ்க்கையை திரைப்படமாக வெளியிடுகிறார்கள். புகழேந்தி தங்கராஜ் இயக்க, D.இமான் இசையமைக்க, கவிஞர் காசி ஆனந்தன் 2 பாடல்கள் எழுத, கதிர்மொழி என்பவரும் 2 பாடல்களுக்கு வரிகள் எழுதியிருக்கிறார். இதில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிகர்கள் சத்யராஜ், நாசர், நடிகை சங்கீதா மற்றும் இயக்குனர் சீமான் போன்றோர் நடித்துள்ளனர்.

லண்டனில் Croydonல் உள்ள Fairfields அரங்கில் 31ம் திகதி ஜூலை மாதம் இந்தப் படத்திற்கான பாடல் வெளியிடும் விழா நடந்தது. லண்டன் வாழ் தமிழர்களால் அரங்கு நிறம்பியிருந்தது. நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் D.இமான், நடிகை சங்கீதா, பாடகி மாதங்கி, பாடகர் பல்ராம், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 

இங்கிலாந்தில் தமிழ் வர்த்தகர்களுக்குள் ஒருவராக இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முன் நாள் Croydon பாராளுமன்ற உருப்பினர் Andrew Pelling, நார்வேயிலிருந்து வந்திருந்த இப்படத்தின் தயாரிப்பாள்ர்கள் மற்றும் படத்தில் பணி புரிந்த கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து மேடையில் "உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்தின் இருவெட்டை வெளியிட்டதில் பெருமைப் படுகிறேன்.

இலங்கைத் தமிழர்களின் கதையை பாருக்குள் பரப்பிட இப்படியான படைப்புகள் பல உருவாக்கப் பட வேண்டும். இத்திரைப்படம் உருவாக காரணமான அனைவருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்றி சொல்கிறோம். குறிப்பாக சம்பளமே வாங்காமல் பணிபுரிந்த பல கலைஞர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.

Sunday, 7 August 2011

மாத்தி யோசி...


குழந்தைகள் பிறந்து வளரும் போது பெற்றோர்கள் என் பிள்ளைகள் doctor ஆகனும், engineer ஆகனும், பல்கலைக்கழகத்தில் பயின்று ஏதாவது ஓர் பட்டம் வாங்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். தன் மகன் படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களினதும் நியாயமான ஆசை. ஆனால் அந்த மகனுக்கு படிப்பு எந்த அளவுக்கு வரும் என்பதில் தான் பிரச்சிணை தொடங்குகிறது.

எனக்குத் தெரிந்த auto ஓட்டுனர் தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் இரவு பகலாக கஷ்டப்பட்டார். அவன் படித்தது BA ஆங்கில இலக்கியம். தட்டுத்தடுமாறி தேர்ச்சியடைந்தான். 2 வருடமாக வேலை தேடிவிட்டு, இப்போது auto ஓட்டுகிறான்.


ஷேக்ஸ்பியர் எதோ ஒரு வரியை எழுதிய போது அவர் மனதில் என்ன நினைத்தார் என்பது போன்ற விடயங்களை மூன்று ஆண்டுகளாக தன்னுடைய நேரத்தையும் அவன் தந்தையின் உழைப்பையும் வீணடித்துப் படிப்பதால் அவனுக்கு என்ன பிரியோசனம் என்பது தெரியவில்லை. ஷேக்ஸ்பியர் என்ன நினைத்தார் என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது இனி வரும் யாருக்கும் எப்போதுமே தெரியாது.

21 வயது வரை சொகுசாகத் திரிவதற்கு படிக்கிறேன் என்று பெயர் சொல்லி அம்மா அப்பாவின் வியர்வையைக் குடிக்காதீர்கள். இப்படி சொல்கிறேன் என்பதற்காக பல்கலைக்கழகங்களை பழிக்கிறேன் என்றோ இலக்கியம் படிப்பவர்களை மட்டம் தட்டுகிறேன் என்றோ இல்லை.
அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் அவசியம். ஒரு மொழியை அறிவதற்கு, உலக அறிவும், சூழலைப் பற்றிய விழிப்பும் வருவதற்கு பாடசாலை மிக முக்கியம் அங்கு பயிற்றுவிக்கப்படும் பூகோளம், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் எல்லாமே தேவை. ஆனால் அதன் பின் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை.

அதனாலேயே பல்கலைக்கழகம் செல்வதால் என்ன பலன் என்பதைக் கணக்கிடச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் நம் இளையோர்கள் தங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு உகந்த கல்வியைப் பயில வேண்டும் என்பதே. வேலை இல்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு டாக்டரோ, வக்கீலோ வேலை இல்லாமல் திரிவது மிக அரிது. நான் கூறிய சம்பந்தமில்லாத, தேவை இல்லாத பட்டம் பெற்றவர்களே இந்த லிஸ்டில் அதிகமாக இருப்பார்கள்.


அதற்குத்தான் சொல்கிறேன் பட்டம் பெற்ற பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள். அந்த திட்டத்திற்கு இந்தப் பட்டம் எந்த அளவு தேவை என்பதை யோசியுங்கள். சிறப்பாக முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் வெளியேற முடியுமா என்று யோசியுங்கள். இதற்கெல்லாம் பின்னும் அந்தப் பட்டம் அவசியம் தானென்றால் படியுங்கள். இல்லாவிடின் அதை கை விட்டு விட்டு தொழில் சார்ந்த கல்வியைப் படியுங்கள். அப்படியும் இல்லாவிடின் நீங்கள் விரும்பும் வியாபார நிறுவனத்தில் கடை நிலை ஊழியராகவாவது சேருங்கள்.

ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்வது போல் நினைத்து 3 ஆண்டுகள் அங்கே தொழில் படியுங்கள். அதை விட்டு விட்டு வேறெந்த courseம் கிடைக்கவில்லை இதையவது படிப்போம் என்று எதையாவது படிக்காதீர்கள். ஏனென்று சொல்கிறேன், உதாரணத்திற்கு 2 நண்பர்கள். ராமு, சோமு என்று வைப்போம். ராமு பல்கலைக்கழகத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் சம்பந்தமில்லாத விஷயங்களை விவாதித்து அலசி ஆராய்ந்து பட்டம் வாங்கி வருவதற்குள் அதே காலப்பகுதியில் சோமு ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து அவர்கள் விற்கும் பொருட்களின் தன்மைகள் என்ன, எவ்வாறு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம், தங்கள் போட்டியாளர்களை எப்படி வெல்லலாம், செலவுகளை எப்படிக் குறைக்கலாம், இலாபத்தை எப்படிப் பெருக்கலாம் என்பதைப் பற்றி practical முறையில் ஆராய்ந்து தெரிந்து கொண்டுவிடுகிறான்.


3 ஆண்டுகளில் வர்த்தக ரீதியாகப் பார்த்தால், என் கம்பனியில் கூட, நான் சோமுவைத் தான் விரும்புவேனே ஒழிய ராமுவை இல்லை. அதே போல் பட்டப்படிப்புக்கு செலவிட இருந்த பணத்தை மூலதனமாகப் போட்டு கிடைத்த அனுபவ அறிவைக் கொண்டு அவர்களே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிடலாம்.

உண்மையிலேயே பார்க்கப் போனால் வியாபாரத்தில் வெற்றி பெற பட்டப் படிப்பே தேவையில்லை. உலகளவில் வியாபார ரீதியில் வெற்றி பெற்றிருக்கும் அனேகருக்கு பட்டங்கள் எதுவும் இல்லை. Bill Gates (Microsoft), Michael Dell (Dell), Steve Jobs (Apple), Sir Richard Branson (Virgin), Richard Desmond (Channel 5), Sir Phillip Green (Arcadia Group) போன்றோர்களை நினைத்துப் பாருங்கள். அண்மைக் காலத்தில் தான் இப்படியா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக Carnegie, Ford, Chanel, Disney போன்றோர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு வெற்றிகரமான வியாபாரியாக வருவதற்கு விற்பனை செய்வது எப்படி என்று தெரிந்திருந்து, கடும் உழைப்பும் நிராகரிப்பை ஏற்காத மனமும் இருப்பதே முக்கியம். இந்தக் குணங்கள் நம் குழந்தைகளிடம் நிறைய உள்ளது. என் 7 வயது மகன் என்னிடம் ஏதாவது வெண்டும் என்று கேட்கும் போது அவன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் தளர்வதில்லை. அதனால் வெட்கப்படுவது இல்லை. முயற்சியைக் கை விடுவதும் இல்லை. இறுதியில் அவன் கோரிக்கைகளை எல்லா நேரங்களிலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் Toys R Us கடையில் இருக்கும் எல்லா வகையான Ben 10 பொருட்களையும் வாங்கி விட வேண்டும் என்ற அவன் இலட்சியம் மட்டும் இன்னும் மாறவில்லை.

அதனால் பெற்றொர்களே, இனிமேலாவது மாத்தி யோசியுங்கள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. வயது வந்த பிள்ளைகளை கவனித்து அவர்களுக்கு ஏற்ற திசையில் திருப்பிவிடுங்கள். படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்பது இல்லை. பிள்ளைகளின் எதிர் காலத்தை அவர்களுடன் மனம் திறந்து கதைத்துப் பேசி ஒரு நல்ல வழியில் கொண்டு செல்லுங்கள். அந்த வழியில் நீங்களும் துணையாக சென்று வெற்றியை அடையுங்கள்.... தயவு செய்து இனி மாத்தி யோசியுங்கள்.Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget