அது வேறு யாரும் இல்லீங்க.. நான் தான்.. காரணம்?
கண்ணில் ஆயிரம் கனவுகளுடன் காதல் கணவனைக் கைப் பிடிக்க இருந்தேன். ஆனால் அவர் ஆரம்பித்த வியாபாரம் நட்டத்தில் போய் பெருத்த கடன். வரவிற்கு மீறிய செலவு போய்க்கொண்டிருந்தது. சில பல கலாச்சார காவலர்களின் கண் துடைப்பிற்காக திருமணம் என்ற சடங்கு தேவைப்பட்டது.
இருவரிடமும் பணம் இல்லை. மாதச் சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தோம். உழைக்கும் பணம் கடனுக்கு வட்டி கட்டவே சரியாக இருந்தது. திருமணம் என்ற பேச்சு வந்ததும், கனடாவில் இருக்கும் என் அத்தை பரிசாக $1000 அனுப்பி வைத்தார். அத்தை அனுப்பிய பணத்தில் இருவருக்கும் மோதிரங்களும், எனக்கு ஒரு சின்ன அட்டியளும் வாங்கியாச்சு.. என் அண்ணன் £300 தந்தான். அதை வைத்து 30 பேர் கலந்து கொண்ட ஓர் எளிமையான பதிவுத் திருமணம் நடந்தது.
ஓர் ஆண்டு பலத்த போராட்டம். வட்டி கட்டுவதற்கு காசு இல்லாமல் காசோலை கொடுத்தாயிற்று. வங்கிக்கு போட பணம் இல்லை. உடனே என் அட்டியள், போட்டிருந்த சங்கிலி, இருந்த இரண்டு தோடு எல்லாவற்றையும் அடகு வைத்து பணம் போட்டாச்சு. வெள்ளைக்கார நாட்டில் முதன்முதலாக அடகு வைத்தோம். அதற்கு வட்டி எவ்வளவு என்று கேட்க மறந்து விட்டோம். வாங்கியது £400. ஆனால் 6 மாதத்தில் கட்ட சொல்லி வந்தது £545. மீண்டும் பணம் இல்லை. ஏலத்தில் போகவிட்டாச்சு.
அந்த சமயம் தான் கருவுற்றேன். வயிற்றில் குழந்தையுடன் கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தைத் தவிர வேறு எந்த நகையும் இல்லாமல் இருந்தேன். ஐயோ.. பாவம் என்றார்கள் சிலர். இரவல் தருகிறோம் சங்கிலி போட்டுக்கொள் என்றார்கள் சிலர். எதையும் செவி சாய்க்கவில்லை.
என் மகள் பிறந்த அந்த வாரம் என்னவரும், என் சகோதரனும் சேர்ந்து வியாபாரம் தொடங்கினார்கள். மகள் பிறந்த வேளை.. நல்ல லாபம். அவள் தொட்டில் இடும் விழாவிற்கு போட எனக்கு ஒரு தங்க ஆரமும் மகளுக்கு வளையலும் வாங்கினார். அண்ணா தன் மருமகளுக்கு தங்கச் சங்கிலி போட்டு அழகு பார்த்தான். இது நடந்தது 2001ல்..
அதன் பின் உழைப்பதெல்லாம் வட்டிக்கும், கடன் கொடுக்கவும் போச்சு. என் மகன் வயிற்றில் வந்த போது தங்க வளையல் போட ஆசையாக இருக்கு என்றேன். என்னவர் மறுப்பு ஏதும் சொல்லாமல், 10 தங்கப் பவுண் வருமாறு 4 வளையல் வாங்கித் தந்தார்.. ஏனோ அத்தோடு என் ஆசை அடங்கிவிட்டது.
இன்று நினைத்த நகையை போய் வாங்கி வரக்கூடிய வல்லமை இருந்தும் தங்க நகையைக் கண்டாலே பிடிப்பதில்லை. இதில் என்ன இருக்கு.. என்ற விரகிதியே மிச்சம் எனக்கு...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தன கணவரின் வணிகத்துக்காக நகைகளை அடமானம் வைக்க வேண்டிய நிலைமை வந்தது. வெறும் கருக மணியுடன் இருந்தார். பின் வாணிபம் நன்றாகக் கொழித்தது உலகறிந்த உண்மை. ஆனால் இன்றளவும் தங்க நகை அணிவதில்லை. வெறும் கருக மணி தான்.
amas32
உங்கள் எதிர்நீச்சலுக்கு வாழ்த்துக்கள், இப்போ நீங்கள் ஒரு பிரபல தொழிலதிபர் என்பது எனக்கு தெரியும்.
உங்களுக்கு தங்க நகை.
எனக்கு காலை உணவு
இன்று வரை காலை உணவு சாப்பிட மனசு வருவதில்லை. நான் சென்னை வந்த போது பசித்தும் சாப்பிட காசு இல்லமல் அதே ஒரு டீயும் ஒரு வடையை கடிச்சிகிட்டு அலுவலகம் போய்டுவேன். மதியம் சைத்தாபேட்டை வணிகர் சங்கத்தில் உணவு பொட்டலம். ஒரு பொட்டலம் வாங்கி சாப்பிடுவது. இரவு கை ஏந்தி பவன் மழை காலத்தில் ரொட்டியும் சாமும்.
வீட்டில் காசு வாங்க கூடாது என்ற வைராக்கியம்
வீட்டுக்கு போனா அம்மா கையால காலை உணவு சாப்பிடுவேன் அவவலவே
இப்போ இங்கே வடையும் கிடைக்காது அப்புறம் என்ன சிங்கள் டீ தான்.
இப்போ காசு இருந்தாலும் என்னடா பணம் இது எனற சலிப்பு
இதுவும் கடந்து போகும்
உங்கள் எண்ணம் நிதர்சனமே சகோதரி...
கிடைக்கவேண்டிய காலங்களில் கிடைக்காமல்...
பின்னர் ஒரு நாள் கிடைக்கையில் அதன் மீதான
நாட்டம் குறைவது சரியே..
தேவைப்படும் ஆசை இருந்ததால் சரி...
வாழ்க்கை அதன் போக்கில் எதையாவது ஒவ்வொருவர் வாழ்விலும் எழுதி விட்டுப் போகிறது..
நாம் அதன் போக்கில்..
மனசைத் தொடும் வரிகள்.. உங்கள் பதிவில்.
Post a Comment