குழந்தைகள் பிறந்து வளரும் போது பெற்றோர்கள் என் பிள்ளைகள் doctor ஆகனும், engineer ஆகனும், பல்கலைக்கழகத்தில் பயின்று ஏதாவது ஓர் பட்டம் வாங்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். தன் மகன் படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களினதும் நியாயமான ஆசை. ஆனால் அந்த மகனுக்கு படிப்பு எந்த அளவுக்கு வரும் என்பதில் தான் பிரச்சிணை தொடங்குகிறது.
எனக்குத் தெரிந்த auto ஓட்டுனர் தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் இரவு பகலாக கஷ்டப்பட்டார். அவன் படித்தது BA ஆங்கில இலக்கியம். தட்டுத்தடுமாறி தேர்ச்சியடைந்தான். 2 வருடமாக வேலை தேடிவிட்டு, இப்போது auto ஓட்டுகிறான்.
21 வயது வரை சொகுசாகத் திரிவதற்கு படிக்கிறேன் என்று பெயர் சொல்லி அம்மா அப்பாவின் வியர்வையைக் குடிக்காதீர்கள். இப்படி சொல்கிறேன் என்பதற்காக பல்கலைக்கழகங்களை பழிக்கிறேன் என்றோ இலக்கியம் படிப்பவர்களை மட்டம் தட்டுகிறேன் என்றோ இல்லை.
அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் அவசியம். ஒரு மொழியை அறிவதற்கு, உலக அறிவும், சூழலைப் பற்றிய விழிப்பும் வருவதற்கு பாடசாலை மிக முக்கியம் அங்கு பயிற்றுவிக்கப்படும் பூகோளம், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம், கணிதம் எல்லாமே தேவை. ஆனால் அதன் பின் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை.
அதனாலேயே பல்கலைக்கழகம் செல்வதால் என்ன பலன் என்பதைக் கணக்கிடச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் நம் இளையோர்கள் தங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு உகந்த கல்வியைப் பயில வேண்டும் என்பதே. வேலை இல்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு டாக்டரோ, வக்கீலோ வேலை இல்லாமல் திரிவது மிக அரிது. நான் கூறிய சம்பந்தமில்லாத, தேவை இல்லாத பட்டம் பெற்றவர்களே இந்த லிஸ்டில் அதிகமாக இருப்பார்கள்.
அதற்குத்தான் சொல்கிறேன் பட்டம் பெற்ற பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள். அந்த திட்டத்திற்கு இந்தப் பட்டம் எந்த அளவு தேவை என்பதை யோசியுங்கள். சிறப்பாக முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் வெளியேற முடியுமா என்று யோசியுங்கள். இதற்கெல்லாம் பின்னும் அந்தப் பட்டம் அவசியம் தானென்றால் படியுங்கள். இல்லாவிடின் அதை கை விட்டு விட்டு தொழில் சார்ந்த கல்வியைப் படியுங்கள். அப்படியும் இல்லாவிடின் நீங்கள் விரும்பும் வியாபார நிறுவனத்தில் கடை நிலை ஊழியராகவாவது சேருங்கள்.
ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்வது போல் நினைத்து 3 ஆண்டுகள் அங்கே தொழில் படியுங்கள். அதை விட்டு விட்டு வேறெந்த courseம் கிடைக்கவில்லை இதையவது படிப்போம் என்று எதையாவது படிக்காதீர்கள். ஏனென்று சொல்கிறேன், உதாரணத்திற்கு 2 நண்பர்கள். ராமு, சோமு என்று வைப்போம். ராமு பல்கலைக்கழகத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் சம்பந்தமில்லாத விஷயங்களை விவாதித்து அலசி ஆராய்ந்து பட்டம் வாங்கி வருவதற்குள் அதே காலப்பகுதியில் சோமு ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து அவர்கள் விற்கும் பொருட்களின் தன்மைகள் என்ன, எவ்வாறு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம், தங்கள் போட்டியாளர்களை எப்படி வெல்லலாம், செலவுகளை எப்படிக் குறைக்கலாம், இலாபத்தை எப்படிப் பெருக்கலாம் என்பதைப் பற்றி practical முறையில் ஆராய்ந்து தெரிந்து கொண்டுவிடுகிறான்.
3 ஆண்டுகளில் வர்த்தக ரீதியாகப் பார்த்தால், என் கம்பனியில் கூட, நான் சோமுவைத் தான் விரும்புவேனே ஒழிய ராமுவை இல்லை. அதே போல் பட்டப்படிப்புக்கு செலவிட இருந்த பணத்தை மூலதனமாகப் போட்டு கிடைத்த அனுபவ அறிவைக் கொண்டு அவர்களே சொந்தமாக ஒரு தொழில் தொடங்கிவிடலாம்.
உண்மையிலேயே பார்க்கப் போனால் வியாபாரத்தில் வெற்றி பெற பட்டப் படிப்பே தேவையில்லை. உலகளவில் வியாபார ரீதியில் வெற்றி பெற்றிருக்கும் அனேகருக்கு பட்டங்கள் எதுவும் இல்லை. Bill Gates (Microsoft), Michael Dell (Dell), Steve Jobs (Apple), Sir Richard Branson (Virgin), Richard Desmond (Channel 5), Sir Phillip Green (Arcadia Group) போன்றோர்களை நினைத்துப் பாருங்கள். அண்மைக் காலத்தில் தான் இப்படியா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக Carnegie, Ford, Chanel, Disney போன்றோர்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு வெற்றிகரமான வியாபாரியாக வருவதற்கு விற்பனை செய்வது எப்படி என்று தெரிந்திருந்து, கடும் உழைப்பும் நிராகரிப்பை ஏற்காத மனமும் இருப்பதே முக்கியம். இந்தக் குணங்கள் நம் குழந்தைகளிடம் நிறைய உள்ளது. என் 7 வயது மகன் என்னிடம் ஏதாவது வெண்டும் என்று கேட்கும் போது அவன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் தளர்வதில்லை. அதனால் வெட்கப்படுவது இல்லை. முயற்சியைக் கை விடுவதும் இல்லை. இறுதியில் அவன் கோரிக்கைகளை எல்லா நேரங்களிலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் Toys R Us கடையில் இருக்கும் எல்லா வகையான Ben 10 பொருட்களையும் வாங்கி விட வேண்டும் என்ற அவன் இலட்சியம் மட்டும் இன்னும் மாறவில்லை.
அதனால் பெற்றொர்களே, இனிமேலாவது மாத்தி யோசியுங்கள். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. வயது வந்த பிள்ளைகளை கவனித்து அவர்களுக்கு ஏற்ற திசையில் திருப்பிவிடுங்கள். படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் என்பது இல்லை. பிள்ளைகளின் எதிர் காலத்தை அவர்களுடன் மனம் திறந்து கதைத்துப் பேசி ஒரு நல்ல வழியில் கொண்டு செல்லுங்கள். அந்த வழியில் நீங்களும் துணையாக சென்று வெற்றியை அடையுங்கள்.... தயவு செய்து இனி மாத்தி யோசியுங்கள்.
0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
Post a Comment