British Airways விமானத்தில் சென்னையை நோக்கிய என் பயணம் ஆரம்பிக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து என் அப்பாவைப் பார்க்கப் போகிறேன் என்ற பூரிப்பு என்னுள்ளே. அப்போது எனக்கு முன் இருக்கையில் ஓர் இளம் குடும்பம். தாய், தந்தை, ஒரு வயதினையும் எட்டாத ஒரு பெண் குழந்தை. தன் மகளின் ஒவ்வொரு அசைவிலும், சிணுங்களிலும் அந்தத் தந்தை அடைந்த ம்கிழ்ச்சியையும், அவர் கண்களில் தெரிந்த ஒளியையும் பார்த்த போது, அந்த தந்தை தன் செல்வத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. இப்படித்தானே என் தந்தையும் என்னை சீராட்டியிருப்பார் என்ற நினைப்பு என் நெஞ்சில் பரவியது. ஒரு தாய் தன் மகளைப் பார்க்கும் போது, ஒரு பெண்ணாக இருந்து பார்த்து பெண்ணிற்கு புகுந்த வீடு செல்லும் முன் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அவள் அழகும், நடத்தையும் மற்றவர்களின் கண்ணை உறுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறாள். அதனால் மகளுடன் கண்டிப்பும், கறாருமாகவே இருக்கிறாள்.
ஆணாக இருக்கும் தந்தைக்கு அந்தக் கவலை ஏதும் இல்லை. தன் அங்கமாக புவியில் ஆட வந்த தேவதையாகவே மகளை எண்ணுகிறார். அதனால் தான் செல்ல மகள் தத்து பித்தென்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் கலை நயத்தை பார்த்துப் பெருமை அடைகிறார். நானும் என் தந்தையும் மட்டும் இல்லை, என் கணவருக்கும் மகளுக்கும் இடையிலும் கூட இப்படித்தான் நடக்கிறது. தந்தையின் அதீத பாசத்துடனும், செல்லத்துடனுமே அவள் வளர்கிறாள்.
காவியங்கள் எல்லாம் தாய் அன்பைப் போற்றும் அளவிற்கு தந்தை அன்பை ஏன் போற்றுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு.
கடினமான பாறைக்கு இடையில் பூக்கும் அந்தப் பூவின் மென்மை தான் இந்த தந்தையன்பு. பல தரப்பட்ட மனிதர்களை நான் அவதானிக்கும் போது, இந்த உணர்வைக் கவனிக்கத் தவறுவதில்லை. ஆனால், ஒவ்வொறு முறையும் அது என்னுள் ஒரு சிலிர்ப்பை விட்டுச் செல்ல தவறுவதுமில்லை.
Teenage காலத்தில் எனக்கு வில்லி என் அம்மா, இப்போது என் மகளுக்கு நான். ஏனென்றால், தங்கள் தேவதைகள் தவறு விடும் போது ஒவ்வொரு அப்பாவும் சொல்லும் வசனம் "பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல, பேச வந்துட்டளாம்." இந்த வசனமும் எத்தனை முறை கேட்டாலும் என்னை ஆச்சிரியப்பட வைக்கத் தவறுவதில்லை.
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
வித்தியாசமான பதிவு! அப்பாவின் அன்பு இவ்வளவு அழகனாதா? என்னைப் போன்ற அப்பாவின் அன்பை அனுபித்தி்ராதவர்களுக்கு, உங்களது இந்த பதிவு நிச்சயமாக ஏக்கத்தை ஏற்படுத்தும்.
மூவிங்..
Post a Comment