இங்கிலாந்து வந்த புதிதில் நான் கடவுளைக் கண்டேன் என்றால் யாரும் நம்ப மாட்டீர்கள்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
2000ம் ஆண்டு என் மகள் மயூரி என் வயிற்றில் இருந்த நேரம். அவள் வந்த அதிர்ஷ்டத்தில் சொந்தமாக சிறு சூப்பர் மார்க்கெட் வைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் லண்டனில் இல்லை ஒரு சிறு கடலோரக் கிராமத்தில்..
இங்கிலாந்தில் என் இரண்டாவது ஆண்டு.. யாரும் இல்லாமல் நானும் என் கணவரும் மாத்திரம்.. அவரும் தொழிலேயே கவனமாக இருந்தார். அதனால் நான் அந்தக் கிராமத்தைச் சுற்றி மாலை நேரங்களில் நடந்து திரிந்து அங்கிருப்பவர்களுடன் கதைத்து வந்தேன்..
பெண்களுக்கு தாங்கள் வயிற்றில் சுமக்கையில் தான் தங்களைச் சுமந்தவளின் நினைப்பு அதிகமாகுமாம்.. அப்படி ஒரு நாள் என் தந்தை தாயுடன் தொலைபேசியில் பேசிவிட்டு.. கனத்த மனத்துடன் ஊரைச் சுற்றி வந்தேன். கடலோரத்தில் போய் கால் நனைப்போமே என்று தோன்றியது. கடற்கரைக்குச் சென்றால் கடல் வற்றிப் போய் இருந்தது. நானும் கடலை நோக்கி நடந்தேன். அம்மாவை நினைத்துக் கொண்டு பழைய கதைகளெல்லாம் அசை போட்ட படி நடந்து கொண்டே இருந்தேன்.. நேரம் போனதும் தெரியவில்லை.. தூரம் போனதும் தெரியவில்லை.
திடீரென்று “அம்மணி.. சாகப்போகிறாயா நீ” என்றொரு குரல்.. மெல்லிதாய் இருட்டத் தொடங்கியிருந்தது.. உயரமாய் வாட்டசாட்டமாய் ஒருவன் நின்றிருந்தான். சுற்றிப் பார்த்தேன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே இல்லை.. நான் கடலை நோக்கி பல தூரம் நடந்திருக்கிறேன் என்று அப்போது தான் உணர்ந்தேன்.
“வா என்னோடு..” என்று என் கையைப் பற்றிக் கொண்டு விறு விறுவென நடக்கத் தொடங்கினான். இரும்புப் பிடி.. வேகமான நடை. பயத்தாலும் என்னால் 7 மாத வயிற்றுடன் அந்த நடைக்கு ஈடு கொடுக்க முடியாமலும் கைகளை இழுத்துப் பார்த்தேன். அவன் விடவில்லை. நிற்கவும் இல்லை. ஒரு வார்த்தை பேசவும் இல்லை. வேகத்தைக் குறைக்கவும் இல்லை.. மூச்சிறைக்க படித்த கொலைக் கதைகள் ஒவ்வொன்றாக ஞாபகம் வர பயத்தால் நடுங்கி அழுத படி பின்னால் இழுபட்டுக் கொண்டு சென்றேன். என் உயிர் பற்றிக் கவலை இல்லை என் குழந்தையின் உயிர் போகப் போதே என்று வீர தமிழச்சியாய் கண்ணீர் சிந்தினேன்.
ஆனால் திடீரென்று கைகளை விட்டுவிட்டு உட்காரச் சொன்னான். சரிந்து மண் தரையில் விழுந்தது தான் தெரியும். சில நிமிடங்கள் பொறுத்து மூச்சு சீராக வந்ததும் நிமிர்ந்து பார்த்தேன்... அங்கு யாருமே இல்லை. ஆனால் என் கால்களிலிருந்து ஒரு ஜான் தூரத்தில் அலை அடித்துக் கொண்டிருந்தது. கும்மிருட்டு வேறு... நடந்ததெல்லாம் பிரம்மையா என்பது போல் இருந்தது.
இருட்டியும் காணவில்லை என்று தேடிவந்த கணவன் சொல்லித் தான் நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பினேன் என்பது விளங்கியது.
அந்த மனிதனை அதற்கு முன் நான் பார்த்ததில்லை.. அதற்குப் பின் பல காலம் அந்த ஊரில் இருந்த போதும் பார்த்ததில்லை. ஊரில் இருந்தவர்களிடம் அவன் அங்க அடையாளாங்கள் சொன்ன போதும் அப்படி யாரையும் தெரியாது என்றார்கள்..
நீங்கள் சொல்லுங்க.. அவன் தான் கடவுளா..?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இங்கிலாந்தில் குளிர் காலங்களில் மதியம் 3-4 மணிக்கே சூரியன் முற்றாக மறைந்துவிடும்.. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நேரம் எடுத்து நடக்காது... அரை மணிநேரத்தினுள் முழுதாக மறைந்துவிடும்...
அது போல் இப்படி low tide - high tide வந்து போகும் கடல்களும் சில நிமிடங்களுக்குள்ளேயே பெரும் மாறுதல்கள் வந்துவிடும்..
2004ம் ஆண்டு இப்படி கடல் நீர் ஏற்றத்தால் சீன Cockle pickers 18 பேர் ஒன்றாக இறந்தது உலகம் முழுக்கத் தெரியும்.. ஒவ்வொரு ஆண்டும் என்னைப் போல் தெரியாமல் மாட்டும் ஒன்றிரெண்டு பேர் செய்தித்தாள்களில் தென்படுவார்கள். அப்போதெல்லாம் நான் என் கடவுளைத் தான் நினைத்துக் கொள்வேன்...
3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
ஆபத்தில் இருந்து காப்பாற்றினால் அது கடவுளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்.
உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
nice
கடவுளுக்கு நன்றி..
Post a Comment