உலகிலேயே 2 கண்டங்களில் அமைந்திருக்கும் ஒரே நகரம் இஸ்தான்புல் மட்டுமே.. 2500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க நகரம். ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரம்.. பின் ஒட்டமன் ராஜ்யத்தின் முக்கிய கேந்திரமாக இருந்தது. இப்போது கூட துருக்கி நாட்டின் தலைநகரமாக இல்லாத போதும், முக்கிய நகரம் இதுவே.
இந்த நகரத்தின் ஆசிய ஐரொப்பா பகுதிகளை பொஸ்பரஸ் என்ற நீர்நிலை பிரிக்கின்றது. கருங்கடலுக்கும் மர்மரா கடலுக்கும் இடையே ஓடும் கால்வாய் தான் பொஸ்பரஸ்.
துருக்கிக்கு நான், கணவர் மற்றும் இரு குழந்தைகளும் செல்வதாக இருந்தது. ஆனால் பயணத்திற்கு முதல் நாள் க்டவுச்சீட்டை எடுத்துப் பார்த்த போது தான் என் மகன் விஷ்ணுவின் கடவுச்சீட்டு காலாவதியாகி இருந்தது. பின் அவனை என் சகோதரங்களுடன் விட்டுச் சென்றோம். அவன் இல்லாமல் போக மனம் இல்லை. ஆனால் வியாபர சந்திப்புகள் ஏற்பாடாகியிருந்ததால் அதை மாற்ற முடியாத நிலை. கவலையுடன் அவனை விட்டுச் சென்றேன்.
விமானம் இஸ்தான்புல்லில் தரை இறங்க ஆயத்தம் ஆகவே.. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். நூற்றுக் கணக்கான கப்பல்கள் கண்ணுக்கு தெரிந்தது. கருங்கடல் பிராந்தியத்துக்குள் செல்லும் அனைத்துக் கப்பல்களும் பொஸ்பரசிற்கு ஊடாகவே செல்ல வேண்டும். ஆனால் நாள் ஒன்றுக்கு 500 கப்பல்களே செல்ல முடியும் என்பதால் இந்தத் தேக்கம் என்று பின்பு அறிந்தேன்.
விமான நிலையத்தில் எங்களை ஏற்றிச் செல்ல லாண்ட்மார்க் குழுமம் ஏற்பாடு செய்த சொகுசு பேருந்துகள் வந்திருந்தன. அதற்குள் ஏறும் வரை தான் மயூரி எனக்கு சொந்தமாக இருந்தாள். அதற்கு பின் அவளுக்கு பல விசிறிகள். உள்ளே ஏறியதில் இருந்து இறுதியாக மீண்டும் லண்டன் வந்து அவர்களுக்கு விடை கொடுக்கும் வரை விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள். குழுவில் இருந்த ஒரே பெண் குழந்தை என்பதால் எல்லோருக்கும் செல்லம். அதுவும் எனக்கே தெரியாது எப்போது படித்தாள் என்று.. துருக்கியைப் பற்றியும் இஸ்தான்புல்லைப் பற்றியும் பல விஷயங்கள் விரல் நுனியில் வைத்திருந்தாள்.
மர்மரா என்றால் கிரேக்க மொழியில் பளிங்கு என்று அர்த்தம். அந்தக் கடல் பளிங்கு போல் இறுப்பதால் மர்மரா கடல் என்று பெயர் வந்தது. Turquoise என்பது நீல நிறத்தில் ஒரு வகை. Turkeyநாட்டின் கடல் வண்ணத்தை விவரிக்கவே இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. இஸ்தான்புல்லில் 2900 மசூதிகள், 200 சர்ச்கள், 20 சினகோக்கள் இருக்கு. மசூதியின் வெளியே ஒன்றுக்கு மேலான தூண் போன்ற கோபுரங்கள் இருந்தால் அது ராஜவம்சத்திற்கு சொந்தமானது. அப்படி இருக்கும் தூண்களுக்கு “மினரெட்ஸ்” என்று பெயர். இன்னும் இப்படி பல விஷயங்கள் சொன்னாள் எனக்குத் தான் இப்போது மறந்து விட்டது.
எங்கு பார்த்தாலும் மரங்கள் வளர்த்து வைத்திருந்தனர். சாலைகளில் நடுவில் கூட மலர்செடிகள் அழகாக சிரித்தன. சென்ற வீதிகளையும் கடலுக்கு அருகிலேயே சாலை செல்லும் விதத்தையும் பார்க்க கொழும்பு வீதிகள் தான் ஞாபகம் வந்தது. சீதோஷன நிலையும் கொழும்பைப் போன்று தான். பொலாட் ரினையன்ஸ் என்ற ஹோட்டலில் தங்க ஏற்பாடாகியிருந்தது. போனவுடன் 23ம் மாடியில் அறை என்றார்கள். கடலுக்குப் பக்கத்தில் 23ம் மாடியிலா? சுனாமி தான் ஞாப்கம் வந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தைகளுடன் வந்திருப்பவர்களுக்கு “Garden Rooms” என்று சொல்லி மாற்றிவிட்டார்கள். அப்பாடா மனதிற்கு நிம்மதியாக இருந்தது.
முதல் வேலையாக wifi பாஸ்வர்ட் வாங்கி iPhoneஐ இணைத்துக் கொண்டேன். இரவு நேர டின்னருக்கு தயார் ஆகி போனால் அங்கு உங்களுக்கான ஸ்பெஷல் இதொ என பெல்லி டான்சர்ஸ் என்று மூன்று பெண்களை இறக்கி விட்டார்கள். உடம்பா இல்லை ரப்பரா என்பது போல் ஆடினார்கள். பார்க்கவே பொறாமையாக இருந்தது. அந்தக் கவலையை மறக்க அங்கு வைத்திருந்த வித்தியாசமான உணவுகளை சுவை பார்த்தேன். சாப்பாடு, குடிவகைகளை படம் பிடித்து டுவீட்டுகளாக அனுப்பிக் கொண்டே இருந்தேன். என் தம்பிகள் மற்றும் அண்ணன் கட்டதுரையின் வேண்டுகோளுக்கு இணங்க பெல்லி டான்சர்களும் பதிவேற்றப்பட்டார்கள். மிக அதிக வரவேற்பைப் பெற்ற கீச்சாக அது அமைந்தது என்று சொல்லவே தேவையில்லை.
இப்படியாக ஒவ்வொரு நாளும் பாதி வியாபர அலுவல்கள் பாதி கேளிக்கை என இனிதாகக் கழிந்தது. இரண்டு முக்கிய மசூதிகள் மற்றும் ஹாகிய சோஃபியா என்ற பழமை வாய்ந்த சர்ச்சுக்கும் சென்றோம். Bosphorusல் அடிக்கடி படகுப் பயணம் செய்தது உல்லாசமாக இருந்தது. இங்கு தரையில் ஓடும் டாக்ஸிகள் போல் அங்கு water taxi பிரபலமாக உள்ளது.
இஸ்தான்புல் என்றால் அடுத்த முக்கிய இடம் அங்கு இருக்கும் Grand Bazar. உலகிலேயே ஒரு கூரைக்கு கீழ் இருக்கும் பெரிய பஜார் இது தான். வைரம் முதல் மண் பானை வரை அனைத்தும் கிடைக்குது. மொத்தம் 61 தெருக்கள், 3000 கடைகள் உள்ளது. ஒருநாள் சராசரியாக 3 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். Peak seasonல் 4 லட்சம் வரை கூட வருவார்களாம்.
ஆனால் யார் கண் பட்டதோ.. எல்லாம் முடிந்து ஏர்போர்ட் வந்து இறங்கிய போது தான் சனி குடியேறினார். எங்கள் விமானம் 6 மணி நேரம் தாமதம் என்று அறிவிக்கப்படுது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து விமானங்களில் பயனிக்கிறேன், அதிக பட்சம் 1 மணி நேரம் கூட தாமதம் ஆனதில்லை. வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இதனால் துருக்கி என்ற பெயரையே இனி யாரும் சொல்லக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கேன். ஆனால் என்னை மீண்டும் துருக்கி போகவைக்கத் தூண்டும் ஒரு விஷயம் இருக்குமானால் அது டொண்டுமார்சி ஐஸ்கிரீம் தான். அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கடைக்காரரும் காட்டும் வித்தைகள் பல.. அதை விட சுவையும் மிக அருமை. இங்கே பாருங்கள் இந்த சிறுவன் படும் பாட்டை..
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிகு: இது என்ன சம்பந்தம் இல்லாத தலைப்பு என்று பார்க்கிறீர்களா? என் கணவர் இந்தப் பாட்டை பாடிப் பாடி... எனக்கும் தொத்திக்கிச்சு.. உடனேயே இப்படி ஒரு கீச்சைப் போட்டுட்டேன்.
பல நூற்றாண்டுகளாக இஸ்தான்புல் தன் ராஜகுமாரியைத் தேடுகிறதாம்.. அதனால் நாளை அங்கு போகலாம் என்று இருக்கேன்..
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
சுவாரஸ்யமான பயணம் ! நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க.....
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்...பெல்லி டேன்சர் போட்டோ...ஒரு ரெண்டு மூணு போட்டு இருக்கலாம்.....: )
// நாள் ஒன்றுக்கு 500 கப்பல்களே செல்ல முடியும் என்பதால் இந்தத் தேக்கம் என்று பின்பு அறிந்தேன். //
சென்னை துறைமுக வாயிலில் கண்டெயினர் லாரிகள் காத்திருக்குமே அது போலவா...
பதிவு முழுவதையும் ரசித்தேன்... ஆனால் அந்த கடைசி ட்வீட் முடியல... என்னடா இது இஸ்தான்புல்லுக்கு வந்த சோதனை...
அருமையான பதிவு சகோதரி
சுவாரசியமாய் இருந்தது..
இஸ்தான்புல்லில் தரை இறங்க ஆயத்தம் ஆகவே.. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். நூற்றுக் கணக்கான கப்பல்கள் கண்ணுக்கு தெரிந்தது
அருமையான காட்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
Post a Comment