Wednesday, 17 August 2011

லண்டன் எரிந்தது - நேரடி அனுபவம்



கண்ணகி கோபப்பட்டாள், மதுரை எரிந்தது, சரி. ஆனால் யார் கோபப்பட்டு லண்டன் எரிந்தது? அங்கே தான் வேறுபாடு. கோபத்தால் இல்லை ஆசையால் அதுவும் பேராசையால் தான் லண்டன் எரிந்த்து.

மார்க் டக்கான்
ஆகஸ்ட் 4, 2011 அன்று மார்க் டக்கான் (Mark Duggan) என்ற ரெளடி ஒருவனை பிடிப்பதற்காக சென்ற காவல் துறையினர், அவனுடன்  நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் அவன் இறந்துவிட்டான். இதைக் கண்டிப்பதற்காக என்று சொல்லி, ஏதோ அப்பாவி ஒருவன் இறந்தது போல் ஊரைக் கூட்டி அழுதபடி அவன் குடும்பத்தினர் அவன் நன்பர்களுடன்  சேர்ந்து ஊர்வலம் நடத்தினார்கள்.  ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கூட்டத்தினர் மாலை மயங்கி இருளத் தொடங்கிய போது சிறிது சிறிதாக ஆயுதங்களைக் கொண்டு வரத் தொடங்கியிருக்கிறார்கள். திடீரென்று கூட்டத்தின் நடுவே 16 வயதுப் பெண் ஒருத்தியை காவல் துறையினர் தாக்கிவிட்டனர் என்ற புரளியை யாரோ கிளப்பிவிட்டு, அதை சாக்காக வைத்து காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினார்கள். ஒரு பிரிவு காவல் நிலையத்தை கை பார்க்க, மற்றவர்கள் குழுக்களாக பிரிந்து சென்று சு்ற்றியிருக்கும் வியாபாரத் தளங்களைத் தாக்கி சூறையாடியிருக்கிறார்கள். (இதைத் தெரிந்ததில் இருந்து நம்ம ஊரு தமிழ் அரசியல் சினிமாக்களை இவிங்க எங்கே பார்த்திருப்பார்கள் என்று தான் எனக்கு குழப்பம்.)

அன்று இரவு நல்ல வேட்டையை ருசி பார்த்தவர்களுக்கு, அடுத்த நாளும் சும்மா இருக்க முடியாமல்,  Brixton, Enfield, Islington, Wood Green, Oxford Circus ஆகிய இடங்களில் 7ம் திகதி இரவு தங்கள் வேலையைத் துவங்கிவிட்டார்கள். 8ம் திகதி பகல் சிறிது அடங்கி மீண்டும் சாயங்கால வேளையில் தொடங்கிய அவர்கள் லீலைகள் Brixton, Bromley, Camden, Chingford Mount, Clapham, Croydon, Ealing, East Ham, Hackney, Lewisham, Peckham, Stratford, Waltham Forest, Woolwich போன்ற பகுதிகளுக்கும் நீண்டது. காவல் துறையினர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு குவிக்கப்பட்டதால், 9ம் தகதி லண்டன் அமைதியாகியது. ஆனால் பிரச்சிணை இங்கிலாந்தின் வேறு பகுதிகளிலும் அன்று வெடித்தது. Birmingham, Nottingham, Leicester, West Bromwich, Wolverhampton, Bury, Liverpool, Manchester, Rochdale, Salford, Sefton, Wirral என்று நாடு தழுவிய ரீதியில் காடையர்கள் தங்கள் வேலையைக் காட்டினார்கள்.

கடைசியில் பார்த்தீர்களேயானால் செத்தவனுக்கும் நடந்தவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடைகள், வங்கிகள், பொதுச்சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஏதோ வெறி வந்தவர்கள் போல் சம்பந்தமில்லாத கட்டங்களையும், குழந்தைகள், பெண்கள் இருந்த வாகனங்களையும் கொழுத்தியிருக்கிறார்கள். பொருட்களை திருடியதைக் கூட என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் அப்பாவிகளின் சொத்துக்களை எரிக்க வேண்டும் என்பது கடைசி வரை விளங்கமுடியவில்லை. இங்கிலாந்தில் கடைகளுக்கு மேலே மாடி வீடுகளில் ஜனங்கள் குடியிருப்பார்கள். அவ்வளவு பேரும் போக்கிடம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் வீட்டை எரித்ததும், அவர்கள் தங்கள் கார் உள்ளே தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள்ளும் பாட்டில் குண்டு வீசப் பட்டிருக்கிறது. நான் இருக்கும் Croydon பகுதியிலே தான் எங்கள் வியாபாரத் தளமும் உள்ளது. அதே வீதியில் இருக்கும் பிரபல electronic items விற்கும் 5 பெரிய அங்காடிகள் களவாடப் பட்டன.  இரவு விழித்திருந்து என் உறவினர்களும் ஊழியர்களும் எங்கள் வர்த்தக நிலையத்தில் பாதுகாப்பிற்காக நின்றார்கள்.

சாலையில் மெதுவாக வாகனத்தில் ரோந்து சென்று பார்த்த போது, புற்றிலிருந்து சாரை சாரையாக கிளம்பும் எறும்புகள் போல் அவ்வளவு பேர், எவ்வித கூச்சமும் இல்லாமல் கடைகளுக்குள் சென்று பொருட்களுடன் வெளி வந்து கொண்டிருந்தார்கள். வெளியில் திரிந்த ஒன்றிரண்டு காவலர்கள் கூட எந்த தடையும் விதிக்கவில்லை. உண்மையிலேயே கையைக் கட்டிய படி தங்கள் வாகங்களை விட்டு இறங்காமல் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், என்ன கொடுமை Sir, என்றால், அந்தக் கும்பலுக்குள் காணப்பட்ட ஒற்றுமை தான். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்த படி சிரித்துப் பேசிக் கொண்டு, நிற பேதம் இன்றி, வயது பேதம் இன்றி, இன பேதம் இன்றி ஒன்றாக கொள்ளையடித்தார்கள்.

புதன் கிழமை, 10ம் திக்தியிலிருந்து தான் காவல் துறையினர் தங்கள் வேலையைக் காட்டத்துவங்கினார்கள். அங்கங்கே இருந்த CCTV கேமராக்கள் மூலம் எடுத்த புகைப்படங்களை வைத்து ஆட்களை கைது செய்யத் துவங்கியுள்ளார்கள். இதை விட கொடுமை 2 ஜந்துகள் Facebookல் பக்கம் உருவாக்கி, இன்று எங்கே எப்படி கொள்ளையடிக்கலாம் என்று ரூம் போட்டு சிந்திக்காத குறையா மூளையைக் கசக்கி யோசித்திருக்கிறார்கள். ஆவர்களுக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப் படும் எவறுக்கும் அரசாங்கம் வழங்கும் பல தரபட்ட உதவித்தொகைகள் அவர்களின் வாழ் நாளுக்கும் வழங்கப்படக்கூடாது என்ற மனு ஒன்றில் 2 லட்சம் பேர் ( நான் உற்பட) கையொப்பமிட்டு அரசங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் பாராளு மன்ற ஒன்று கூடலில் அது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு என்ன தண்டனை இப்போது கிடைத்தாலும் கண்ணுக்கு முன் நடந்த தவறுகளை தட்டிக் கேட்க முடியாமல் தலையக் கவிழ்ந்திருக்கும் அந்த உணர்வு விட்டுச் செல்லும் வலியும், வாழ் நாள் உழைப்பெல்லாம் வீணாகிவிடுமா என்ற அந்த பதைப்பும் காலத்துக்கும் மறக்காத வடுவாக என் நெஞ்சில் என்றும் இருக்கும்.

2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

jgmlanka said... Best Blogger Tips

வேதனையான விடயம் தான். அதிலும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை எண்ணிப்பார்க்க முடியாதது. அவர்கள் தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி ஒவ்வொரு `பெனி` யாக சேமித்த சொத்துக்கள்.ஒரே நாளில் தீக்கிரையானது மிகக் கொடுமையான விடயம்.
உங்கள் பதிவுகள் காலத்தால் அழியாதவை. வாழ்த்துக்கள்

sugi said... Best Blogger Tips

இந்த சம்பவம் நெஞ்சில் ஈரம் உள்ள அனைவருக்கும் மறக்காத, எப்பொழுது நினைத்தாலும் பதற்றத்தை வரவைக்கும் கொடுமையான நிகழ்வு. குறிப்பாக, நேரில் இந்த சீரழிவைப் பார்த்த நமக்கு என்றென்றும் பயம்,சோகம், இப்படி ஒரு நிகழ்வு திரும்ப நிகழக் கூடாது என்ற பதற்றம் எழுத்தில் சொல்ல மாளாதது.
உங்கள் எழுத்து உங்களது கோபம், ஆற்றாமை, ஏன் இப்படி? என்று பல வகைப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
அதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் நிறுவனங்களின் அதிபராக இருப்பதால், உடைக்கப்ட்டுத் திருடப்பட்டக் கடை முதலாளிகளின் மன உணர்வை மிக நெருக்கமாக உணர முடிகிறது. அருமையானப் பதிவு. நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget