Saturday 10 September 2011

பைஜாமா போட்ட பையன்



ஐந்து நாட்களுக்கு முன் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அடக்க முடியாமல் அழுதேன். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கும் கதை. கனவிலும் நினைவிலும் திடீர் திடீரென்று ஞாபகம் வந்து மனநிலையை பாதித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் உங்களுடனும் இதை பகிர்வோம் என்று முடிவெடுத்தேன்.

நகரத்தில் மூன்று நண்பர்களுடன் சுற்றித் திரிந்த புருணோ என்ற 8 வயது சிறுவன், ஜெர்மன் ராணுவத்தில் வேலை செய்யும் தன் தந்தைக்கு கிடைக்கும் பதவி உயர்வு காரணமாக கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு வீட்டிற்குள்ளும் அதை சுற்றியிருக்கும் சிறு தோட்டத்திலேயும் மாத்திரமே விளையாட அனுமதிக்கப்படுகிறான்.  நண்பர்களுக்கு ஏங்கும் புருணோ, தொட்டத்து ஷெட்டில் இருக்கும் ஜன்னல் வழியே  வெளியில் போகக் கூடிய வழியைக் கண்டு பிடிக்கிறான்.

ஒரு சிறு காட்டுப் பகுதியை கடந்ததும், நீண்ட முள் வேலி ஒன்றை அடைகிறான். முள் வேலிக்கு அடுத்த பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த போதும்  தன் வயதொத்த சிறுவன் ஒருவன் இருப்பதைப் பார்த்து மகிழ்கிறான். ஷ்மூவேல் என்ற அந்த சிறுவனை தினமும் சந்தித்து தன் நட்பை வளர்க்கிறான். தினமும் உணவுப் பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் கொண்டு வந்து கம்பி வேலியூடாக பகிர்ந்து கொள்வார்கள்.

தாங்கள் யூதர்கள் என்பதால் தன்னையும் தன் குடும்பத்தையும் இங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள், எல்லோரும் ஒரே மாதிரியான கோடு போட்ட பைஜாமா சட்டையே போட வேண்டும் என்றும்,  ஒருவர் ஒருவராக குறைந்து தானும் தன் தந்தையும் தான் பாக்கியிருக்கிறோம் என்று ஷ்மூவேல் கூறியபோதும் அதன் அர்த்தம் விளங்காமலேயே புருணோ கேட்டுக்கொண்டான்.


 புருணோவின் தந்தையின் உதவியாளனாகிய ஹேர் என்ற ஜேர்மானியப் படை வீரன் புருணோவிற்கும் அவன் சகோதரிக்கும் ஆசரியராக  நியமிக்கப் படுகிறான். ஜேர்மானிய முதலாளித்துவத்தையும் யூதர்கள் அடிமைகள் என்பதையும் சொல்லிக்கொடுக்கிறான். புருணோவினால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப் பட்டிருக்கும் பவேல் என்ற யூத மருத்துவர் தவறுதலாக தன் மேல் வைன் கோப்பையை தட்டியதற்காக அவரை ஹேர் அடித்துக் கொள்கிறான். இதைப் பார்த்த பின் புருணோவிற்கு ஹேரின் மேல் உள்ள பயம் அதிகரிக்கின்றது.

பவேலின் இடத்தை நிற்ப்புவதற்காக முகாமிலிருந்து ஷ்மூவேல் கொண்டு வரப்படுகிறான். அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனுக்கு ஒரு கேக் துண்டை புருணோ கொடுக்கிறான். அப்போது அங்கு வரும் ஹேர் யார் உன்னை கேக் சாப்பிட அனுமதித்தது என்று ஷ்மூவேலை அதட்டியவுடன், அவன் புருணொ தந்ததாக சொல்கிறான். ஆனால் ஹேரின் மேல் உள்ள பயத்தினால் அவன் அதனை மறுத்து விடுகிறான். திருடும் எலிக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றபடி புருணோவை அனுப்பி வைக்கிறான். மறு நாளில் இருந்து ஷ்மூவேல் வீட்டு வேலைக்கு வருவதில்லை. மனம் வருந்தும் புருணோ தங்கள் பழைய சந்திப்பு இடத்தில் சென்று காத்திருக்கிறான். சில தினங்களுக்கு பின்பே ஷ்மூவேலை மீண்டும் அவ்விடத்தில் காண்கிறான். முகத்தில் பலத்த காயத்துடன், ஒரு கண்ணை திறக்கக் கூட முடியாமல் இருக்கும் ஷ்மூவேலைப் பார்த்து மிகவும் வெட்கப்படும் புருணோ தன் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறான்.

புருணோவின் தந்தை அவர் குடும்பத்தாரிடம் அது ஒரு யூத தடுப்பு முகாம் என்றே சொல்லியிருந்தார். ஆனால் ஹேரின் சில பேச்சுகளிலிருந்து அது ஒரு யூத ஒழிப்பு முகாம் என்பதை தெரிந்து கொள்ளும் அவன் தாயார் தன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு தான் பழைய படி நகரத்திற்கே செல்வதாக சொல்கிறாள். அதை ஏற்கும் தந்தை அடுத்த நாளே அனுப்பி வைப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டவுடன் தன் நண்பனிடம் விடயத்தை சொல்ல ஓடுகிறான் புருணோ. அங்கே தன் தந்தையை அதிகாரிகள் கூட்டிச் சென்றதாகவும் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வராத்தால் தான் கவலையுடன் இருப்பதாகவும் ஷ்மூவேல் தெரிவித்தான். தன் நண்பனுக்கு தான் இழைத்த துரோகத்திற்கு கைமாறு செய்ய வேண்டும் என்று நினைத்த புருணோ நாளை தான் ஊருக்கு கிழம்பும் முன் உன் தந்தையை தேட உதவி செய்வதாக சொல்லி, முகாமில் இருப்பவர்கள் போடும் கோடு பொட்ட பைஜாமா சட்டை தனக்கும் கொண்டு வரச் சொல்கிறான்.

 மறுநாள் காலையில் தாய் பயனத்திற்கு ஆயத்தமாவதற்குள் தன் நண்பனைச் சென்று சந்திக்கிறான் புருணோ. கொண்டு சென்றிருந்த மண்வெட்டியால் கம்பி வேலியின் கீழ் கிடங்கு கிண்டி அதனூடு உள்ளே செல்கிறான். ஷ்மூவேல் கொண்டு வந்திருந்த பைஜாமாவை போட்டுக்கொண்டு முகாமிற்குள் செல்கிறான். உள்ளே சென்ற பின் தான் தந்தையின் டாக்குமெண்ட்ரியில் காட்டியது போல் இல்லாமல் வேறு ஒறு மாறுபட்ட சூழலுக்குள் வந்ததை உண்ர்கிறான். நோயும் அசுத்தமாகவும் உள்ள இடத்தை விட்டு தான் வெளியேற விரும்புகிறான். தன் தந்தையை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே என்று ஷ்மூவேலின் முகம் வாடுவதைப் பொறுக்காமல் மேலுல் மேலும் முகாமிற்குள் ஊடுருவுச் செல்கிறான்.

திடீரென்று சில ராணுவ வீரர்கள் வந்து அவர்கள் இருக்கும் அறையிலிருந்து எல்லோரையும் வெளியேரச் சொல்கிறார்கள். கூட்ட நெரிசலில் மாட்டும் இரு சிறுவர்களும் அவர்களுடன் சேர்த்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அதே நேரம் வீட்டில் புருணோவைக் காணோம் என்று தேடத் துவங்குகிறார்கள். ஷெட்டில் இருக்கும் ஜன்னல் திறந்திருப்பதைப் பார்த்து அவன் தந்தை சில வீரர்களுடன் அவனைத் தேடி ஓடி வந்து புருணோவின் துணிகளைக் கண்டெடுக்கிறார். நடந்ததை யூகித்து அவர்கள் முகாமிற்குள் சென்று ஒவ்வொறு கட்டடமாக தேடிச் செல்கிறார். அவன் தாயும் துணிகள் இருந்த இடத்தை வந்து அடையவும், சிறுவர்கள் இருந்த கூட்டம் ஒரு அறைக்குள் விட்டு உடைகளைக் கழையச் சொல்லப்படுகிறார்கள். தங்களைக் குழிப்பாட்டப் போகிறார்கள் என்று பேசிய படியே சுற்றி இருந்தவர்களும் சிறுவர்களும் ஆடைகள் இல்லாமல் பக்கத்து அறைக்குள் கைகளைக் கோர்த்த படியே செல்கிறார்கள். அங்கே அவன் தந்தை ஒரு சிறையறை முழுதும் காலியாக இருப்பதைப் பார்த்து நடப்பதை விளங்கிக் கொண்டு முகாமின் மையத்தை நோக்கி ஓடுகிறார். அதற்குள் ஷ்மூவேலும் புருணோவும் இருக்கும் அறையின் இரும்புக்கதவு மூடப்படுகிறது. மேலிருந்து விஷவாயுவை வெளியிடும் இரசாயணம் கொட்டப் படுகிறது, தந்தை அதைக் கண்டு தன் மகனின் பெயரை உறத்த கத்திய சத்ததின் எதிரொலியைக் கேட்டு, அவனைப் பெற்ற தாய் கதறி அழுத படி மண்ணில் விழுகிறாள். கடைசியாக அந்த இரும்புக் கதவு காட்டப்படுகிறது.

வார்த்தைகளால் என் உணர்வை எழுத முடியவில்லை. என் மகனுக்கும் அதே வயதென்பதாலோ அல்லது என் நாட்டில் நடக்கும் இன ஒழிப்பை ஒத்து இருப்பதாலோ தெரியவில்லை. ஆனால் அடி வயிற்றை பிசைந்து விட்டது. கள்ளங்கபடமில்லாத இரண்டு சிறுவர்களின் மூலம் கதை சொல்லப்பட்டதால் மனதைக் கூடுதலாக தொடுவதாக உள்ளது.

சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் இப்படதைப் பாருங்கள். அப்போது இப்படி மடிந்த யூதர்களையும், இப்போது மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களையும் நினைத்துப் பாருங்கள்.  

3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Avani Shiva said... Best Blogger Tips

oh god

Cable சங்கர் said... Best Blogger Tips

ரியலி குட்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வசிஷடர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைத்தது போல் உள்ளது. நன்றி சங்கர் சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget