Saturday, 8 October 2011

இக்கரைக்கு...


ஒரு வழியாக கடைசி ட்ரேயை(tray) சுரண்டிக் கழுவி, சுரேன் நிமிர்ந்த போது நாரியும் முழங்காலும் கடுக்கிக் கொண்டிருந்தது. கழுவியதை எல்லாம் தூக்கிக் கொண்டு நடக்க உடம்பில் எந்த தசையெல்லாம் வேலை செய்கிறது என்பதை சுரீர் சுரீர் என்ற வலியால் உணர்த்திக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரம் தான், அதன் பின் சுரேனுக்கு விடுதலை. வாரத்தில் 5 நாட்கள் டபுள் அடிக்கிறவன். இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்து செய்வதை லண்டன் தமிழர்கள் டபுள் அடிக்கிறது என்று சொல்வார்கள். இப்படிப் பல புதிய வார்த்தைகளை கடந்த 4 ஆண்டுகளில் நிறையவே படித்து விட்டான்.
வேலை முடிந்து, துருக்கி நாட்டு மானேஞரிடம் விடை பெற்றான். “டுமோரொ ஐ சைன். நொ கமிங் வெர்க் மொர்னிங்” (Tomorrow I sign, No coming work morning) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிப் புறப்பட்டான்.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பேருந்து நிலையத்தை அடைந்தான். இரவு நேரப் பேருந்து வர இன்னும் 20 நிமிடங்கள் இருந்தது. அங்கிருந்த கதிரையில் இருந்த படி கண்களை மூடினான். பல யுகங்களுக்கு முன் போன்றிருந்த் ஒரு நாளில் விளையாடி விட்டு ஓடி வந்தவன், எல்லோரும் குசினிக்குள் இருப்பதைப் பார்த்து விட்டு அங்கு ஓடினான். “என்ன சாப்பாடு அம்மேய்” என்றவனுக்கு "சோறும் முருங்கைக் காய்” என்று தாய் முடிக்கும் முன்னே தட்டைக் காலால் எட்டி உதைத்த படி, “இரவும் சோறே... எனக்கு வேண்டாம்” என்று கோபமாய்ப் போய் படுத்து விட்டான். அன்று தாய் தலையில் அடித்துக்கொண்டு அழுதது, இன்னும் புதிசாகவே இருக்குது அவன் நெஞ்சில். ஆனால் இன்றோ அவன் போய் தான் தங்கியிருக்கும் வீட்டில் ஓனரக்கா பிரிஜ்ஜில் என்ன வைத்திருக்கிறாரோ, எப்ப சமைத்ததோ அதைத் தான் சாப்பிட வெண்டும். இது தான் விதி என்பதா...
பேருந்து வரவும் ஏறி அமர்ந்தான். பேசுவதற்கு யாரும் இல்லை. எங்குமே இருப்பதில்லை. 7 நாளும் வேலை. முடிந்தவுடன் வீடு. வீட்டில் சின்ன பொக்ஸ் ரூமில் அடைந்தது போல் இருக்கும். ஆனால் களைப்பில் கட்டிலில் விழுவது தான் தெரியும் அதற்குள் அலார்ம் அடித்து விடும். என்ன வாழ்க்கையடா இது என்றிருக்கும்... ஊரில் முகத்தில் ஒரு சிறு வாட்டத்துடன் வீட்டிற்குள் காலடி வைத்தாலே அம்மா 1008 கேள்வி கேட்பா... “சொல்லு மகனே.. என்ன செய்யுது? தலையிடியோ? வைத்துக்கு எதும் செய்யுதோ? கோப்பி போட்டுத் தரவோ? சாப்பிடிரியோ செல்லம்?” இன்னும் எத்தனை எத்தனை.... அப்போது எரிச்சலாக இருக்கும் இப்போதோ....?
மிட்சம் கொரிஞ்ச் பார்க் (Mitcham Gorringe Park) நிறுத்ததில் இறங்கிய போது அலை பேசி அழைத்து.. அம்மாவின் நம்பர்.. நினைத்ததெல்லாம் கேட்டு விட்டதோ...?
“கலோ”
“தம்பி இங்கே நரேன் பிரச்சிணையாக இருக்கிறான். என்னெண்டு கேளு”
“என்னவாம்?”
“மோட்டர் சைக்கில் வாங்கித்தரட்டாம். படிக்கிற பெடியன் உனக்கெதுக்கு உது இப்பே என்று கேள்வி கேட்டதற்கு, சண்டைக்கு வர்றான்.”
அதற்குள் தம்பி போனைப் பறித்தான்...
“அம்மாவுடன் ஏண்டா பிரச்சிணைப் படுறே”
“உனக்கென்ன நீ லண்டனில் சுகவாசியா... கை நிறைய காசோட... கேள்வி கேட்க ஒருத்தரும் இல்லாமல் திரியிரே. உனக்கு எங்களைப் பார்த்தால் அட்வைஸ் சொல்லத்தான் தோன்றும்.”
“ஓமடா... கேள்வி கேட்க ஒருத்தருமில்லை.” என்று சுரேன் திகைத்துப் போய் மெல்லிய குரலில் சொன்னதும், அவன் கண்ணில் உருண்டோடிய நீர்த்துளியையும் அவன் தம்பி அறிந்திருப்பானோ தெரியவில்லை.பிகு: அன்பு நண்பர்களே... முதல் முறையாக என் சிறுகதையைப் பிரசுரிக்கிறேன். தயவு செய்து வாசித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். குறை நிறை தெரிந்தால் தான் மீண்டும் எழுதத் தோண்றும்...

11 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

கதையல்ல கண்களில் கண்ணீர் வழியும் நிஜம்ல்லவா!

ஷர்மி said... Best Blogger Tips

நன்றி இராஜராஜேஸ்வரி.
ஆனால் எழுத்து நடையில் இருக்கும் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லவில்லையே... எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.

mathan said... Best Blogger Tips

நாங்களும் இப்படித்தான் அண்ணாவ கேட்டோம் இப்பதான் இந்த கட்டுரை படிக்கும் போதும் நாங்களும் அதேநிலமஜில் இருக்கும் போதுதான் புரிகிறது

bandhu said... Best Blogger Tips

பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்.. முதல் கதை போலவே தெரியவில்லை. உண்மைக்கு வெகு அருகில் இருப்பதால் தானோ என்னவோ.. வாழ்த்துக்கள்..

ஷர்மி said... Best Blogger Tips

மதன்...
தலையிடியும் காய்ச்சலும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அதோடு இள வயதில் வாழ்வின் பிரச்சிணைகள் தெரியாது. எங்களுக்கான நேரம் வரும் போது தான் புரியும்...
வருகைக்கு நன்றி மதன்.

ஷர்மி said... Best Blogger Tips

பாராட்டுகளுக்கு நன்றி பந்து...

மனதில் பல கருக்கள் தோன்றிய போதும் ஒரு நாளும் எழுத்துரு கொடுத்ததில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றியே பல கதைகள் நடக்குது. சுவாரிசியமான எழுத்து நடைதான் முக்கியம். அது என்னிடம் உள்ளதா என்பது தான் கேள்வி?

Anonymous said... Best Blogger Tips

இந்த கதையில் உங்கள் எழுத்து நடை நன்று. ஒரு வேளை இந்த கதையை நீங்கள் நேரில் உணர்ந்ததால் சாத்தியமாயிற்றோ? அதுவும் அந்த ஆங்கில உரையாடல்... நிதர்சன உண்மை!

ஷர்மி said... Best Blogger Tips

நாலு பெருக்கு நல்லது செய்ரதுன்னா, எதுவுமே தப்பில்லை... அப்படின்னு எங்கள் தலைவர் கமல் சொல்லியிருக்கிறார். 4 பேரின் பின்னூட்டத்தை நம்பி மேலும் கதை எழுதப்போறேன். இனி உங்கள் தலையெழுத்து...

RealBeenu said... Best Blogger Tips

அருமையாக உள்ளது தோழி.. மேலும் வளர வாழ்த்துக்கள்

RealBeenu said... Best Blogger Tips

அருமையாக உள்ளது தோழி.. மேலும் வளர வாழ்த்துக்கள்

Karthick said... Best Blogger Tips

அருமை தோழி. என் போன்றவர்களின் உணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget